சோழவந்தான் அருகே மணல் அள்ளுவதால் கால்வாய் கரை உடையும் அபாயம்
சோழவந்தான் அருகே மணல் அள்ளுவதால் கால்வாய்கரை உடையும் அபாயம் உள்ளது எனவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்ட கரட்டுப்பட்டியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 120–ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. பெரியார் கால்வாய் மூலம் நீர்வரத்துப்பெற்று ஒரு மடைபாசனம் மூலம் சுமார் 400 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த சிலமாதங்களாக பெரியார் கால்வாய்கரை மற்றும் கண்மாய் கரைக்கு இடைப்பட்ட சுமார் 10 மீட்டர் அகலம் கொண்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுமார் 10 முதல் 15அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெரியார் கால்வாயின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாச்சிகுளம் பாசன விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மணல் அள்ளப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மணல் அள்ளுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணல் திருட்டால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் பெரியார் கால்வாய் மற்றும் கண்மாயில் நீர்வரத்து வரும் காலங்களில் இருகரையும் உடையும் அபாய நிலை உள்ளது எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.