முன் எச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் வழக்கமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சல் நோய் பாதிப்பால் மாதந்தோறும் 300 முதல் 500 பேர் வரை வருவது உண்டு. தற்போது தட்பவெப்ப நிலை காரணமாக காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 750 முதல் 850 வரை காய்ச்சல் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்ததின் பேரில் இம்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை. விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதியில் மட்டும் 5 முதல் 7 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக ஏடிஎஸ் கொசு ஒழிப்புக்காக மாவட்டம் முழுவதும் 1100 ஊழியர்களை அனுப்பி சோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இம்மாதிரியான ஏற்பாடுகள் இல்லை. இதனால் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்குநோய் பாதிப்பை கண்டறிய ரத்தத்தில் செல்களை எண்ணுவதற்கு செல்கவுன்டர் என்ற நவீன எந்திரம் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக தமிழகஅரசு 25 செல்கவுன்டர் எந்திரங்களை வழங்கி உள்ளது. இந்த எந்திரங்கள் செல்கவுன்டர் இல்லாத அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்கப்படும். இதன் மூலம் மாவட்ட மக்கள் டெங்கு நோய் பாதிப்பை உடனடியாக கண்டறிய வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.