பெருந்துறை அருகே ரோட்டை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெருந்துறை அருகே ரோட்டை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடை என்ற இடத்தில் பவானி–பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுமார் 4 அடி ஆழ பள்ளம் உள்ளது. இதை சரிசெய்யாததால் மழை பெய்யும்போது அதில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது பள்ளம் இருப்பது தெரியாமல் ரோடு என்று நினைத்து பள்ளத்தில் இறங்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சபீனா என்ற பெண்ணை கோவை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சு சென்றது. பெருந்துறை வாவிக்கடை அருகே வந்தபோது ரோட்டோர பள்ளத்தில் இறங்கி ஆம்புலன்சு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த சபீனா இறந்தார். மேலும் 4 பேர் காயம் அடைந்தார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாவிக்கடை சென்று விபத்து ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி நின்றுகொண்டு, ‘உடனே ரோட்டை சீரமைக்கவேண்டும்‘ என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் இங்கேயே நிற்போம் என்று காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்தார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ‘இந்த பள்ளத்தில் இதுவரை ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு விட்டது. தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர் கண்டுகொள்ளவில்லை‘ என்று புகார் கூறினார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் இருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார் என்பவரை அங்கு வரவழைத்தார்கள். உடனே பள்ளத்தை சீரமைக்கவேண்டும் என்று அவரிடம் கூறினார்கள். அதற்கு அவர், ‘பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக பள்ளம் சீரமைக்கப்படும். மழைநீர் தேங்காதவாறு வடிகாலும் அமைத்து தருகிறோம் என்று அவர் உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலைந்து சென்றார்கள்.