குண்டர் தடுப்பு சட்டத்தில் அண்ணன், தம்பி சிறையில் அடைப்பு
திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 27–7–2017 அன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அருண்குமார் என்பவருடன் வேலையின் காரணமாக காக்களூரில் உள்ள உறவினர் கடைக்கு சென்றார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 27–7–2017 அன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அருண்குமார் என்பவருடன் வேலையின் காரணமாக காக்களூரில் உள்ள உறவினர் கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த மோகன் (42), அவரது சகோதரர் சேட்டு (38) மற்றும் அவரது நண்பர்களான வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த நரேஷ் (24), சென்னை அண்ணாநகர் காவாங்கரையை சேர்ந்த வேலு (30), பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியை சேர்ந்த முகமதுரஷீத் (25), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சேட்டு (22) ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராகேஷை வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த வழக்கில் திருவள்ளூர் தாலுகா போலீசார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மோகன், அவரது சகோதரர் சேட்டு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், கொலை வழக்கில் தொடர்புடைய மோகன், சேட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.