செங்கோட்டையில் முன்னறிவிப்பின்றி பஸ்நிலையம் மூடப்பட்டது பொதுமக்கள் அவதி

செங்கோட்டையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பஸ்நிலையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Update: 2017-10-06 21:00 GMT

செங்கோட்டை,

செங்கோட்டையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பஸ்நிலையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

செங்கோட்டை பஸ்நிலையம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பஸ்நிலையம், கேரள மாநிலத்துடன் இருந்தபோது திறக்கப்பட்டதாகும். பின்னர் 1956–ம் ஆண்டு கேரளாவில் இருந்து செங்கோட்டை தமிழ்நாட்டுடன் இணைந்தது. நகராட்சி அண்ணா பஸ்நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டது.

அன்று முதல் செங்கோட்டை பஸ்நிலையத்தை, நகரசபை நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த பஸ்நிலையமானது, கேரளா அருகில் இருப்பதால் இருமாநில பொதுமக்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்வார்கள். கேரள மாநிலம் புனலூர், திருவனந்தபுரம், குளத்துபுழா, கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், அச்சன்கோவில் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.

முன்னறிவிப்பின்றி மூடபட்டது

அதுபோல் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திருப்பதி, புதுச்சேரி, பெங்களூரு, நெல்லை, ராஜபாளையம் உள்பட பல ஊர்களுக்கு இங்கிருந்து பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் தொலைதூரத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு செங்கோட்டை வழியாக செல்வது தான் விரைவான பாதையாகும். பஸ்நிலையம் அருகில் குற்றாலம் அருவியும் உள்ளது.

இருந்தும் செங்கோட்டை பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்து செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. மிகச்சிறிய பஸ்நிலையம் தாக். மேலும் போதிய வசதிகளும் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் வாசல் பகுதி, மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பஸ்நிலையத்தை சீரமைக்க போவதாக முன்னறிவிப்பு இன்றி நேற்று முதல் மூடப்பட்டது.

பொதுமக்கள் அவதி

பஸ்நிலையத்தின் வாசல்களில் கயிறு கட்டப்பட்டுள்ளது. எந்த ஊர்களுக்கு எந்த இடத்தில் நின்று பஸ் ஏற வேண்டும் என்ற அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள இந்த நேரத்தில் பஸ்நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகரசபை ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கேட்டபோது, பஸ்நிலையத்தின் சாலைகள் மிகவும் பழுதடைந்து இருப்பதால் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36½ லட்சம் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான வேலைகள் டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகள் முடிவடைதற்கு ஒரு மாதம் காலம் ஆகும். வேலைகளை துரிதப்படுத்தி முன்கூட்டியே பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்தகாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்