சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் 13–ந் தேதி சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் சிறுபான்மையினர் டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றும், வந்தவாசியில் வருகிற 13–ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொரிவித்துள்ளார்.

Update: 2017-10-06 00:00 GMT

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடன் பெற தகுதியானவர்களுக்கு 2–வது சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தனிநபர் கடன் திட்டம், வியாபாரம், தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. சில்லறை வியாபாரம், மரபு வழி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகனக்கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன் வழங்கப்படுகிறது.

இவை தவிர மாணவர்களுக்கு கல்விக்கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறுகடன் என பல்வேறு நிலைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், பயனாளிகள் விண்ணபிக்கவும் வசதியாக வருகிற 13–ந் தேதி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

கடன் தேவைப்படும் சிறுபான்மையினர், தங்களது சாதிச்சான்று, பள்ளி மாற்றுச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் நகல், ஆதார் அட்டை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கவும், தகுதியான மனுக்கள் மீது கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்