சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்ததால் விபரீதம்: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவி சாவு

மாணவி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்து பஸ்சில் சிக்கியதால், தடுமாறி கீழே விழுந்த மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாகச் செத்தார்.

Update: 2017-10-05 23:44 GMT
புதுச்சேரி,

புதுவை ஏம்பலம் புது நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி இவருடைய மகள் பொற்கிளை (வயது 21). கோரிமேட்டில் உள்ள அன்னை தெரேசா சமுதாய அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இறுதியாண்டு படித்து வந்தார். தினமும் பஸ் மூலம் கல்லூரிக்கு வந்து செல்வார். இதனிடையே எல்லப்பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று செவிலியர்கள் மற்றும் செவிலிய கல்லூரி மாணவிகள் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பொற்கிளை நேற்று காலை ஏம்பலத்தில் இருந்து பஸ் மூலம் வந்த அவர் எல்லைப்பிள்ளை சாவடி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த துப்பட்டா காற்றில் பறந்தது. அது அந்த வழியாக மாணவர்களை அழைத்து சென்ற தனியார் பள்ளி பஸ்சில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பொற்கிளை கீழே விழுந்துள்ளார். இதில் அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் வடக்குப் பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்