லோக் அயுக்தாவை மூடிவிட்டு சித்தராமையா ஊழல் தடுப்பு படையை தொடங்கி இருக்கிறார்
லோக் அயுக்தாவை மூடிவிட்டு சித்தராமையா ஊழல் தடுப்பு படையை தொடங்கி இருக்கிறார் என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வால்மீகி ஜெயந்தி விழா பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:–
தேவராஜ் அர்ஸ் முதல்–மந்திரியாக இருந்த காலத்தில் இருந்து நாயக், உப்பார் சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகரிடம், இந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று நாயக் மற்றும் உப்பார் சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் பிரதமர் சேர்த்தார்.
அந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் இப்போது நல்ல நிலைகளில் உள்ளனர். அரசியல் ரீதியாகவும் பலம் அடைந்துள்ளனர். ஆனால் செய்த சேவைகளை நினைவு கூர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இது வேதனை அளிக்கும் விஷயம். வால்மீகி சமுதாயத்திற்கு நானும், குமாரசாமியும் ஏராளமான உதவிகளை செய்துள்ளோம்.குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமா தயாரிப்பாளராக இருந்தார். அப்போது இந்த வால்மீகி சமுதாயத்திற்கு நன்கொடை கொடுத்து உதவி செய்தார். விதான சவுதா வளாகத்தில் வால்மீகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இது அரசின் கடமை. இதை நான் பாராட்டுகிறேன். வால்மீகி ஜெயந்தி விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அழைக்கவில்லை. இது சரியல்ல.
ஊழல் தடுப்பு படைமத்தியிலும், மாநிலத்திலும் நான் ஆட்சி புரிந்துள்ளேன். என்னுடைய ஆட்சி காலத்தில் தான் லோக் அயுக்தா அமைப்பு தொடங்கப்பட்டது. இதை மூடிவிட்டு சித்தராமையா ஊழல் தடுப்பு படையை தொடங்கி இருக்கிறார். அந்த அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
ஜமீர்அகமதுகான் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறியுள்ளார். இது சரியல்ல. பரமேஸ்வர் மந்திரிசபையில் சேருவதற்கு முன்பும், சேர்ந்த பிறகும், அதில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் என்ன பேசியுள்ளார் என்பது எனக்கு தெரியும். அதனால் பரமேஸ்வரின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. உண்மையை மூடிமறைக்க யாராலும் முடியாது.
காங்கிரசார் நமது கட்சி அலுவலகத்தை பறித்துக்கொண்டனர். அப்போது உட்கார இடம் இல்லாமல் கல் மீது அமர்ந்து கண்ணீர் விட்டேன். இப்போது மன திருப்தியுடன் இந்த அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துள்ளேன். எனக்கு எந்த மேலிடமும் இல்லை. என்னுடைய பார்வையே வேறு. கர்நாடகத்தில் இருக்கும் நிலை நாசமாகிவிட்டது.இவ்வாறு தேவேகவுடா பேசினார்.