கல்வி கடன் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு

வங்கிகளில் கல்வி கடன் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வருவதால் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளரை உடனடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2017-10-05 22:47 GMT
விருதுநகர்,

இது குறித்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் இதற்கு முன்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் கிடைக்க உதவி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஏழை தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நிறைந்த இம்மாவட்டத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதற்கான கல்விக்கடன் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் கூட பல்வேறு காரணங்களை கூறி தகுதி உள்ள மாணவர்களுக்கும் கல்வி கடன் மறுக்கப்படுகிறது. இதனால் அந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் போது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் முறையிடலாம் என்றால் முன்னோடி வங்கி மேலாளர் நியமனம் செய்யப்படாத நிலை உள்ளது. அங்குள்ள பிற அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இதனால் ஏழை,எளிய மாணவர்கள் தங்களுக்கு வங்கி கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கிக்கு மேலாளர் நியமனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் ஏழை மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்