கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-05 22:45 GMT
மணமேல்குடி,

மணமேல்குடியில் பல ஆண்டு காலமாக சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், கட்டுமாவடி, காரக்கோட்டை உள்பட 128 கிராம மக்கள் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு ஆகியவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மணமேல்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை ஆலங்குடிக்கு இடமாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சார்பில் சிலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின்போது, சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படாது, என்று அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படாது என்பதை அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட வேண்டும். அது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் பதிவாளர் உத்தரவாதம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி தாசில்தார் (பொறுப்பு) செல்வநாயகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சார் பதிவாளர் பச்சையப்பன், கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்