டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு

கீழையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2017-10-05 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி, காமேஸ்வரம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின், அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். கொசு ஒழிப்புக்கு தேவையான கொசு நாசினி மற்றும் கொசுப்புழு நாசினி போன்றவை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துக்கொண்டு கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபட வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தேவையான அளவில் குளோரின் கலந்து வினியோகிக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வடிகால் வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், விடுதிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி மருத்துவரீதியாக தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் அனைவருக்கும் சுகாதார துறையினர் வழங்க வேண்டும்.

பொது மக்கள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளையும், பாத்திரங்களையும் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசு புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளும் பொழுது வீட்டின் உரிமையாளர்களையும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தி வருங்காலங்களில் அவர்களே தங்களின் வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகாத வண்ணம் தடுக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், காமேஸ்வரம் தூயசெபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலையில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்