சுகாதார வளாகம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து, 2½ வயது குழந்தை பலி

சுகாதார வளாகம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் 2½ வயது குழந்தை தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

Update: 2017-10-05 23:00 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன கொத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் அமரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுனந்தா. இவர்களுக்கு சசி(வயது 5) என்ற மகன் உள்ளான். மேலும் சந்துரு என்ற 2½ வயது ஆண் குழந்தையும் இருந்தது. நேற்று மாலை 4.30 மணி அளவில் குழந்தை சந்துரு வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென்று சந்துரு மாயமானான். அவனை பெற்றோர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் சுகாதார வளாகம் அமைப்பதற்காக அரசு சார்பில் 3 அடியில் குழி தோண்டப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் அந்த குழியில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

இந்த நிலையில் சந்துருவின் பாட்டி திம்மக்கா அந்த குழியின் அருகே சென்று பேரனை தேடினார். அப்போது குழந்தையின் தலைப்பகுதி அந்த குழியில் மேலே தெரிவதை திம்மக்கா பார்த்து அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அமரேஷ், சுனந்தா உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் குழிக்குள் பிணமாக கிடந்த குழந்தை சந்துருவின் உடலை மீட்டனர்.

அப்போது சந்துருவின் உடலை கண்டு பெற்றோரும், அவனது உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதே போல சூளகிரி தாசில்தார் பெருமாளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து சந்துருவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்