திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Update: 2017-10-05 22:45 GMT
பவானிசாகர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் உப்ளிக்கு நேற்று காகித பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த கனகு என்பவர் ஓட்டினார். இந்த லாரி சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 27-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 5 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென லாரி பழுதாகி ரோட்டில் அப்படியே நின்று விட்டது. இதனால் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 சக்கர வாகனங்கள், கார்கள் மட்டும் சென்று வந்தன. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பழுதடைந்த லாரியை சரிசெய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் லாரி ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனால் கனரக வாகனங்கள் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பயணிகள் அவதி

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற கனரக வாகனங்கள் அனைத்தும் சத்தியமங்கலம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் ஆசனூர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்களில் வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் குடிக்க தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காததால் அவதிப்பட்டனர். மேலும் தாளவாடி மற்றும் திம்பம் மலைப்பாதை பகுதிகளில் நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்ததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். 

மேலும் செய்திகள்