ஈரோட்டில் 97 மி.மீட்டர் மழை அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோட்டில் 97 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது.

Update: 2017-10-05 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. வானில் இருந்து அருவி போல் மழை கொட்டியதால், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் பெருகிய வெள்ளம் ரோடுகளில் காட்டாறு போல பாய்ந்தது.

இந்த பெரு மழையில் ஈரோடு பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, பிரப் ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளிலும் தண்ணீர் அதிகமாக சென்றது.

ஈரோடு காமராஜர் வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வெள்ளம் புகுந்தது. நேற்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் அங்கு தேங்கி நின்ற மழைநீரை வாளியில் இறைத்து வெளியேற்றினார்கள். பி.பி.அக்ரகாரம் அருகே ஒரு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வைராபாளையம் பகுதியில் செங்கல் சூளையில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு அறுத்து வைக்கப்பட்டு இருந்த செங்கல்கள் தண்ணீரில் மூழ்கின.

ஈரோடு கனிராவுத்தர் குளம் தூர்வாரப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில் தண்ணீர் தேங்க தொடங்கியது. ஒரு புறம் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மதகு பகுதி திறந்து இருந்ததால் தண்ணீர் வெளியேறியது. நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மதகு பகுதி அடைக்கப்பட்ட பின்னர் தண்ணீர் தேங்கத்தொடங்கியது.

இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளம், குட்டைகள் நிரம்பின. பவானி அருகே பெரியபுலியூர் வளையக்காரன்பாளையத்தில் உள்ள வாராக்காடு ஏரியில் கடந்த சில தினங்களாக தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வந்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏரிக்கு நீர் வந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வாராக்காடு ஏரி நிரம்பியது.

மேலும் இந்த மழையால் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். மேலும், அவர் பவானி நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்களும் பள்ளிக்கூடத்துக்கு சென்று தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட தாளக்கரை, தட்டக்கரை, ஈரெட்டி, கொங்காடை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை அதிகாலை 3 மணி வரை என 2½ மணி நேரம் கொட்டி தீர்த்தது.

அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கும்பரவாணிபள்ளம், வரட்டுப்பள்ளம், கல்லுப்பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு சென்றது. இதன்காரணமாக வரட்டுப்பள்ளம் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் பர்கூர் வனப்பகுதியில் உள்ள குளம் மற்றும் வனக்குட்டைகள் நிரம்பின. அந்தியூர்-மைசூர் செல்லும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 1-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் போக்குவரத்து தொடங்கியது.

இதேபோல் கவுந்தப்பாடி, நம்பியூர், கோபி, கொடிவேரி, பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகாலை பதிவான மழை விவரம் மி.மீட்டர் அளவில் வருமாறு:-

ஈரோடு - 97

பவானி - 87.6

கவுந்தப்பாடி - 49

வரட்டுப்பள்ளம் - 37.2

நம்பியூர் - 31

குண்டேரிபள்ளம் - 20

கோபி - 18

கொடிவேரி - 12.2

பெருந்துறை - 12

சத்தியமங்கலம் - 6

தாளவாடி - 3

பவானிசாகர் - 3

மொடக்குறிச்சி - 2 

மேலும் செய்திகள்