உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2017-10-06 00:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி(வயது 27). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக காலி குடத்துடன் சென்னை-சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று சுமதி மீது மோதுவது போல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, அங்கிருந்து விலகி ஓட முயன்றார்.

இதற்கிடையே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சேலம் சண்முகபுரத்தை சேர்ந்த அருள்முருகன், சுமதி மீது மோதாமல் இருப்பதற்காக சரக்கு வாகனத்தை இடது புறத்தில் இருந்து வலது புறமாக திருப்பினார். இருப்பினும் சுமதி மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தடுப்புக்கட்டையை தாண்டி சென்று, எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரிஷிவந்தியம் ஒன்றியம் மேலபழங்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி(50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த ராஜாமணியின் மகள் நிறைமாத கர்ப்பிணியான பரிமளா(27), காரை ஓட்டி வந்த சங்கராபுரம் அருகே நூரோலையை சேர்ந்த ஹரிராமசந்திரன்(35), சரக்கு வாகன டிரைவர் அருள்முருகன், இவருடன் பயணம் செய்த சேலத்தை சேர்ந்த மாணிக்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த பரிமளா, ஹரிராமச்சந்திரனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், சுமதி, அருள்முருகன், மாணிக்கம் ஆகியோரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி பரிமளா, ஹரிராமச்சந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிராமசந்திரனுக்கு தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள்முருகன், மாணிக்கம் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் மாணிக்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அருள்முருகனுக்கு சேலம் அரசு மருத்துவமனையிலும், சுமதிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் பலியான ராஜாமணியின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து பற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து பற்றி விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் பலியான ராஜாமணி சித்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ரிஷிவந்தியம் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்