கூடுவாஞ்சேரி ரெயில் மோதி தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்ததில் பெண் நசுங்கி சாவு

கூடுவாஞ்சேரி ரெயில் நிலைய நடைமேடையில் உட்கார்ந்திருந்த பெண் மீது ரெயில் மோதி தூக்கிவீசப்பட்ட மாடு விழுந்தது. இதில் அந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-05 23:30 GMT
தாம்பரம்,

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தை கடந்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பசுமாடு தண்டவாளத்தை கடந்தது.
வேகமாக வந்த ரெயில் பயங்கரமாக மோதியதில் அந்த மாடு தூக்கி வீசப்பட்டது. அந்த மாடு கூடுவாஞ்சேரி ரெயில் நிலைய நடைமேடையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண் மீது வேகமாக வந்து விழுந்தது. இதில் அந்த பெண் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார்.

உடனே அந்த பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் செங்கல்பட்டு மாடம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அர்ஜுனன் (வயது 60) என்பவரின் மனைவி பார்வதி (55) என்பது தெரிந்தது. இருவரும் கீரை வியாபாரம் செய்து வந்தனர். கூடுவாஞ்சேரியில் கீரை வியாபாரத்தை முடித்துவிட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலுக்காக அவர்கள் இருவரும் நடைமேடையில் காத்திருந்தபோது தான் தூக்கி வீசப்பட்ட மாடு பார்வதி மீது விழுந்ததும் தெரியவந்தது.

மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அவர் சிகப்பு, வெள்ளை நிற சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்திருந்தார். அவர் யார்? ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்