ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 8 பேர் கைது மேலும் 4 பேரிடம் விசாரணை

காஞ்சீபுரத்தில் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 8 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-10-05 22:30 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.பிரபாகர், சரவணன், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளை கைது செய்ய பாலுச்செட்டிசத்திரம், திருப்பருத்திக்குன்றம், சின்ன காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காஞ்சீபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த முருகன்(வயது 30), வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெமிலியை சேர்ந்த மற்றொரு முருகன் (27), காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் (34), ரத்தினவேல் (22), குமார் (44), ராஜ்குமார் (27), காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளி அருள் (34), காஞ்சீபுரம் வணிகர் வீதியை சேர்ந்த சுதாகர் (31) ஆகிய 8 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து கத்திகள், உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் வழிப்பறி ஈடுபட முயன்றதுடன், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளா? என்ற சந்தேகத்தின்பேரில் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த மணி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம், நரசிங்கராயர் தெருவைச் சேர்ந்த நரேந்தர் ஆகிய 4 பேரை பிடித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்