வடக்கன்குளம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி

வடக்கன்குளம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-10-05 20:30 GMT

வடக்கன்குளம்,

வடக்கன்குளம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பாறைகள் சரிந்து விழுந்தது

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை அடுத்த பழவூர் அருகே கருங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல் குவாரியில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் உள்ள ஒரு பகுதியில் இருந்து பெரிய பாறைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது.

இதனால் கல்குவாரியின் கீழ் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ராதாபுரம் அருகே உள்ள சிங்காரதோப்பை சேர்ந்த துரை, தங்கராஜ் ஆகிய இருவர் மீதும் பாறைகள் விழுந்து அமுக்கியது.

2 பேர் பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்து அலறி துடித்த அவர்கள், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுபற்றி பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்து விசாரணை நடத்தினர். பின்னர் துரை, தங்கராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்