பாளை. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வார்டு, வார்டாக ஊர்வலமாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2017-10-05 21:30 GMT

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வார்டு, வார்டாக ஊர்வலமாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டெங்கு விழிப்புணர்வு தினம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வியாழக்கிழமை தோறும் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி ஆஸ்பத்திரி டீன் சித்தி அத்திய முனவரா தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அனைத்து வார்டுகளுக்கும் ஊர்வலமாக சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அங்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முன்னதாக, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியை ஆஸ்பத்திரி டீன் சித்தி அத்திய முனவரா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சிறப்பு வார்டு

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக அரசு டெங்கு நோயை கண்டறிவதற்காக ‘செல் கவுன்டர்‘ எனப்படும் நவீன எந்திரங்களை வழங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு 46 எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு எந்திரத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இந்த நவீன எந்திரங்கள் 30 படுக்கை வசதி கொண்ட அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற எந்திரங்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 2 உள்ளன. தற்போது கூடுதலாக 2 எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

4 பேர் பலி

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 820 பெரியவர்களும், 1,053 சிறியவர்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு 3 பெரியவர்களும், ஒரு குழந்தையும் பலியாகி உள்ளனர்.

தற்போது சிறப்பு வார்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 15 பெரியவர்களும், 4 சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கு சென்று டெங்கு விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால், உடனடியாக அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்