டைனோசர் காலத்துப் பறவை!

நெருப்புக் கோழிகளின் அறிவியல் பெயர் ஸ்ட்ருதியோ கமிலு. உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் நெருப்புக் கோழிகள் உள்ளன.

Update: 2017-10-05 23:45 GMT
  * 7 கோடி முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நெருப்புக்கோழிகள் பூமியில் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது டைனோசர் காலத்தில் இருந்து காணப்படும் இந்தப் பறவையினம், இன்றும் பூமியில் உலவி வருவது அதிசயங்களில் ஒன்றாகும். ஏனெனில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த இதைப் போன்ற ராட்சத பறவை இனங்கள் பல பூண்டோடு அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  * உலகில் வாழும் பறவை இனங்களில் நெருப்புக்கோழியே உருவத்தில் மிகப்பெரியது. இது அதிகபட்சம் 9 அடி உயரம் வளர்கிறது. இதன் சராசரி எடை 160 கிலோ. பெண் நெருப்புக் கோழிகள் சற்றே உயரம் மற்றும் எடை குறைந்தவையாக உள்ளன.

  * நெருப்புக் கோழிகள் பண்டைய எகிப்து நாட்டில் சாரட் வண்டிகளை இழுக்க பயன்படுத்தப்பட்டன. 

  * நெருப்புக்கோழிகள் தண்ணீர் குடிப்பதில்லை. தான் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து தேவையான நீர்ச்சத்தைப் பெற்றுக் கொள்கிறது. எனவே வறண்ட பகுதிகளிலும் இவற்றால் தாக்குப்பிடித்து வாழ முடியும். 

  * சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை நெருப்புக் கோழிகள் பெற்றுள்ளன. அதுவே அவற்றுக்கு அதிக ஆயுளைப் பெற்றுத் தருகின்றன. நெருப்புக் கோழிகள் 50 முதல் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

  * ஆண் நெருப்புக்கோழி ‘ரூஸ்டர்’ என்றும், பெண் நெருப்புக்கோழி ‘ஹென்’ என்றும் அழைக்கப் படுகிறது.

  * நெருப்புக்கோழியின் கண்கள் அவற்றின் மூளையைவிட பெரிதாக இருக்கும். 

  * 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றது இது.

  * நெருப்புக்கோழியின் கால்களில் தடிமனான 2 விரல்கள் காணப்படும். ஆனால் ஒரு விரலில் மட்டுமே நகம் காணப்படுவது அதிசயமாகும்.

  * கிழங்குகள், இலைகள், பூச்சிகள், பூக்கள், புற்கள் மற்றும் கனிகளை உண்ணக்கூடியவை. 

  * நெருப்புக்கோழியின் முட்டை 6 அங்குலம் (15 செ.மீ.) அளவுடையது. ஒன்றரை கிலோ வரை எடை இருக்கும். அதாவது சுமார் 20 கோழி முட்டைகள் அளவுடையது நெருப்புக் கோழியின் முட்டை. மனிதர்களால் நெருப்புக்கோழி முட்டை சாப்பிடப்படுகிறது. ஒரு பெரிய குடும்பத்திற்கு ஒரு நெருப்புக் கோழி முட்டையே போதுமானது.

  * நெருப்புக்கோழிகள் எதிரிகளை முன்னோக்கி எட்டி உதைத்துத் தள்ளிவிடும். கடினமான அலகால் கொத்தும். மனிதர்களைக்கூட உதைத்து விரட்டிவிடும். உயரமான உறுதியான கால்களும், கடினமான அலகுகளும் அவை வேட்டையாட உதவியாக இருக்கின்றன. வி‌ஷ நாகங்களைக்கூட நெருப்புக்கோழிகளால் வேட்டையாடி சாப்பிட முடியும். 

  * நெருப்புக்கோழி இறைச்சியையும் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள். 

  * ஆப்பிரிக்காவின் சில இடங்களில் நெருப்புக்கோழி சவாரி நடக்கின்றன. சுற்றுலா பயணிகள் ஜாலியாக சவாரி செய்து வலம் வருகிறார்கள். சில இடங்களில் நெருப்புக்கோழி மீது அமர்ந்தபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  * நெருப்புக்கோழியின் உடலில் ரோமங்கள் கருப்பு–வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் கால்களிலும் கழுத்திலும் அதிகமாக ரோமங்கள் இருப்பதில்லை. பெண் நெருப்புக்கோழியின் ரோமங்கள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. 

  *  நெருப்புக்கோழிகள் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை. ஒரு குழுவில் 10 முதல் 50 பறவைகள் இருக்கும்.

  * பெண் நெருப்புக்கோழி ஆண்டிற்கு 60 முட்டைகள் வரை இடும். 

  *  ஆண் நெருப்புக்கோழிகள், தன் ஜோடியை கவர்வதற்காக நடனம் ஆடும். அப்போது ரோமங்களையும் முன்னும் பின்னுமாக அசைக்கின்றன.

 * நெருப்புக்கோழிக்கு அடுத்தபடியாக ஈமு, காசோவாரி, கிரேட்டர் ரியா, பெங்குயின் போன்ற பறவைகளும் உருவத்தில் பெரியதாக காணப்படுகின்றன. இவற்றாலும் பறக்க முடிவதில்லை.

நெருப்புக்கோழிகளால் பறக்க முடியாது. அதிக உடல் எடையும், சிறிய இறக்கையும் அதன் பாரத்தை சுமந்து பறந்து செல்ல தடையாக உள்ளன. ‘‘உறுதியான உடல் அமைப்பும், வேகமும் இவற்றை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளப் போதுமானதாக இருப்பதால் அவற்றிற்கு பறக்கும் அவசியம் ஏற்படவில்லை. அந்தத் தன்மையே காலப்போக்கில் பரிணாம அடிப்படையில் நிலைபெற்று நெருப்புக்கோழிகள் பறக்க முடியாத  தன்மையைப் பெற்றுள்ளன’’ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகிறார்கள். 

மேலும் செய்திகள்