பள்ளிகொண்டா அருகே அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம்

பள்ளிகொண்டா அருகே உள்ள ஒதியத்தூருக்கு 3 நாட்களாக அரசு டவுன் பஸ் இயக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை திடீரெனச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-05 00:32 GMT

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அருகே உள்ள ஒதியத்தூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக தடம் எண்.21–கே டவுன் பஸ் தினமும் இயக்கப்படுகிறது. இந்தப் பஸ்சில் காலை வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள், அருகே ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பயணம் செய்கிறார்கள். மாலையில் இதே பஸ்சில் தான் அனைவரும் ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக டவுன் பஸ் ஒதியத்தூருக்கு இயக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று மாலை 6 மணியளவில் ஒதியத்தூருக்கு டவுன் பஸ் வந்தது. அதனை, பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடந்த 3 நாட்களாக ஏன் பஸ்சை இயக்கப்படவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு டிரைவர், போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் உத்தரவின்படி நாங்கள் செயல்பட்டோம் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அரசு போக்குவரத்துக்கழக கொணவட்டம் பணிமனையைச் சேர்ந்த அதிகாரியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த அதிகாரி செல்போன் அழைப்பு ஏற்கவில்லை.

இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் பஸ் அங்கிருந்து செல்ல முடியாதபடி முன்னால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அனுமந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சை சிறைப்பிடித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், தினமும் ஒதியத்தூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படும் என உத்தரவாதம் அளித்தால் தான் பஸ்சை விடுவிப்போம் என்று கூறினர்.

அதைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் அனுமந்த் செல்போனில் கொணவட்டம் பணிமனையைச் சேர்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துக்கூறினார். தினமும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அதிகாரி உறுதி அளித்தார். இதையடுத்து சுமார் 2 மணிநேரமாக சிறைப்பிடித்த டவுன் பஸ்சை விடுவித்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.


மேலும் செய்திகள்