மன்மோகன்சிங் பிரதமராக பணியாற்றிய போது எதிர்கால இந்தியாவை சிறப்பாக வடிவமைத்தார்

மன்மோகன்சிங் பிரதமராக பணியாற்றியபோது எதிர்கால இந்தியாவை சிறப்பாக வடிவமைத்தார் என்று சித்தராமையா கூறினார்.

Update: 2017-10-05 00:06 GMT

பெங்களூரு,

கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பொருளாதார கல்லூரி பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவருக்கு விழாவில் பங்கேற்ற முதல்–மந்திரி சித்தராமையா சால்வை அணிவித்து, நினைவுப்பரிசை வழங்கினார். அதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

டாக்டர் அம்பேத்கர் பொருளாதார கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று எதிர்கால பொருளாதார நிபுணர்களிடம் உரையாற்ற அவரை விட சிறந்த பொருளாதார நிபுணர் வேறு யாராவது இருக்கிறார்களா?. நான் இல்லை என்று சொல்கிறேன். என்னுடைய இந்த பதிலை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் தேவை இல்லை. திறமையின் சிகரம், அறிவுத்திறன் கொண்டவர் என்று மக்கள் வர்ணிக்கிறார்கள். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அவருடைய மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த மன்மோகன்சிங் நிதித்துறையை திறம்பட நிர்வகித்தார். அவர் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை மன்மோகன்சிங் ஆவார்.

10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றிய அவர் எதிர்கால இந்தியாவை சிறப்பான முறையில் வடிவமைத்தார். அவருடைய சாதனைகள் குறித்து மணிக்கணக்கில் பேச முடியும். பக்கம், பக்கமாக எழுத முடியும். மன்மோகன்சிங் இங்கு ஆற்றும் உரை மாணவர்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவின் அறிவுத்திறன் தலைநகராக பெங்களூரு விளங்குகிறது. இங்கு ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்த பொருளாதார கல்லூரியும் இணைகிறது.

லண்டன் பொருளாதார கல்லூரியில் இருந்து முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த அம்பேத்கர் தான் டாக்டர் பட்டம் பெற்றார். உலக பொருளாதாரத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு மகத்தானது. அதனால் இந்த கல்லூரிக்கு அவருடைய பெயரை சூட்டியுள்ளோம். நான் பொருளாதார நிபுணர் இல்லை. ஆனால் 12 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அனுபவம் எனக்கு உள்ளது. இதில் நான் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டேன்.

முன்னுரிமை துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். கல்விக்குத்தான் நான் அதிக முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். அதனால் இந்த பொருளாதார கல்லூரியை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தேன். இந்த கல்வி நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த கல்வி நிறுவனம் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையவும் அரசு உதவிகளை வழங்கும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்