பால்கரில், பால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.40 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பால்கரில், பால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வசாய்,
பால்கரில், பால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பால்கர் மாவட்டம் தலசாரி டாப்சாரி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் அதிகளவில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பால்கர் குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த பால் பண்ணைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, அங்கு ‘ஹெராயின்’ உள்பட பல போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த போதைப்பொருள்களை கைப்பற்றினார்கள். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.அந்த பால் பண்ணையை அதன் உரிமையாளர் 3 பேரிடம் வாடகைக்கு விட்டிருந்து உள்ளார். எனவே அவர்கள் தான் போதைப்பொருளை பதுக்கி வைத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். இந்தநிலையில், அந்த 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.