பெண் பயணி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட கேட்டரிங் ஊழியர் கைது
தாதர் ரெயில் நிலையத்தில் பெண் பயணி முன்பு ஆபாச செய்கையில் ஈடுபட்ட கேட்டரிங் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் 30 வயது பெண் ஒருவர் மின்சார ரெயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள நடைமேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், அந்த பெண்ணை நோக்கி ஆபாசமாக பேசியதுடன், தனது பேண்டை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்டு உள்ளார். அன்று அந்த பெண் முகத்தை சுளித்தபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.இந்தநிலையில், மறுநாள் இரவு அந்த பெண் ரெயிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த போது, அதே இடத்தில் நின்று கொண்டு அந்த நபர் மீண்டும் பெண்ணை நோக்கி ஆபாச செய்கையில் ஈடுபட்டார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண், பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் அந்த நபரை பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார்.மேலும் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சிவ்சரன்சாகேத் என்பதும், கேட்டரிங் நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது.