பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவி பலி

பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட என்ஜினீயரிங் மாணவி உயிர் இழந்தார்.

Update: 2017-10-04 23:00 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, எம்.ஜி.ஆர் நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் மொய்தீன் பாட்ஷா.

இவருடைய மகள் செரின்பானு (வயது 20). மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

செரின்பானு கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் அதிகமானது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செரின்பானு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சரியான முறையில் கொசு மருந்துகள் அடிப்பதில்லை, நிலவேம்பு கசாயம் கொடுப்பதில்லை, வீட்டிற்குள் வந்து வீடு சுத்தமாக உள்ளதா என்று பார்க்கிறார்கள். ஆனால் வீட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளை நகராட்சி அதிகாரிகள் பராமரிப்பதில்லை.

கடந்த மாதம் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் ஒருவன் உயிர் இழந்தான். தற்போது இங்கு மர்ம காய்ச்சலால் கல்லூரி மாணவி ஒருவர் இறந்துள்ளார்.மேலும் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஒழிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்