எண்ணூர் விரைவு சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
எண்ணூர் விரைவு சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவொற்றியூர்,
சென்னை எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டம் கடந்த 2013–ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக எண்ணூர் விரைவு சாலை விரிவாக்க பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் உள்ள நல்லதண்ணீர் ஓடை குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள 446 குடும்பங்களை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகேயுள்ள வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு ரூ.50 கோடி செலவில் அடுக்குமாடி வீடு கட்டி கொடுப்பது என முடிவு செய்து 446 குடும்பங்களுக்கும் தற்காலிக குடியிருப்பு ஆணை மற்றும் வீடுகளை காலி செய்து வேறு இடத்தில் வசிக்க குடும்பத்திற்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது.
சாலை விரிவாக்க பணியின் போது 310 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 136 வீடுகளை இடிக்காமல் விட்டுவிட்டனர். இடிக்கப்படாத வீடுகளில் உள்ள மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அதே இடத்தில் குடியிருந்து வந்தனர். இதற்கிடையே மீனவர்களுக்கு அடுக்குமாடி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நல்லதண்ணீர் ஓடைகுப்பம் மீனவர்கள் உடனடியாக அனைத்து வீடுகளையும் காலி செய்தால்தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் 136 மீனவ குடும்பத்தினர் குடியிருப்புகள் கட்டி தரும்வரை காலி செய்யமாட்டோம் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை வருவாய்த்துறையினர் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன் தலைமையில் வந்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நல்லதண்ணீர் ஓடைகுப்பம் பகுதியில் இருந்த வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வடசென்னை இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் வீட்டில் இருந்த மீனவ பெண்கள் கதறி அழுது வீடுகளை விட்டு வெளியே வர மறுத்தனர். அவர்களை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்தனர். அப்போது மயக்கம் போட்டு விழுந்த பெண்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கடலுக்குள் இறங்கி அவர்களை கரைக்கு இழுத்து வந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்றது. இதனால் எண்ணூர் விரைவு சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.