கனமழை: தொட்டள்ளா ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

அஞ்செட்டி பகுதியில் கனமழை பெய்ததால் தொட்டள்ளா ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

Update: 2017-10-04 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் ஒகேனக்கல் செல்லும் சாலையில் தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அஞ்செட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதுவரை இந்த பாலம் 6 முறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது 7-வது முறையாக மீண்டும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக அஞ்செட்டி - ஒகேனக்கல்லுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்