எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட விழா அமைச்சர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட விழாவை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-04 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். அதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்களின் வாயிலாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார். கலெக்டர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படக்கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்களின் வாயிலாக எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது செயல் படுத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள், தத்துவப் பாடல்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்வுகள், திரைப்படங்கள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் வரை அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்கள் கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி உறுப்பினர் பூக்கடைரவி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பொன்னுவேல், பென்னாகரம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மதியழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் பழனிசாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்