பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடி. அவர் முதலில் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வணிக நிறுவனங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஸ்ரீதர் இருந்தார். இந்த கொலை வழக்கில் நேரில் ஆஜராக காஞ்சீபுரம் கோர்ட்டு அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஸ்ரீதர் படம் ஒட்டப்பட்டு அவரை போலீசார் தேடிவந்தனர்.
ஸ்ரீதர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனிடையே ஸ்ரீதரின் சொந்த ஊரான திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள அவரின் வீடு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அவரது வீடு உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை அதிகாரிகள் முடக்கி ‘சீல்’ வைத்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் லண்டனில் இருந்து சென்னை வந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கி காஞ்சீபுரம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தனர்.
சந்தோஷ்குமார் தனது பாஸ்போர்ட் முடக்கியதை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், சந்தோஷ்குமாரை பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி சந்தோஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் ஸ்ரீதரின் மனைவி குமாரியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து காஞ்சீபுரம் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டது உண்மை என உறுதி செய்தார்.
ஸ்ரீதரை கண்டுபிடிக்க காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீநாத் தீவிர முயற்சி மேற்கொண்டார். தற்போது அவர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.