பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு தேசப்பற்றை உருவாக்கும் தியாகிகள் வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்

பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு தேசப்பற்றினை உருவாக்கும் தியாகிகள் வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கொடிகாத்த குமரன் விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2017-10-04 23:15 GMT

ஈரோடு,

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழா நேற்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் விழா நடந்தது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கொடிகாத்த குமரன் உருவப்படத்தை திறந்து வைத்தும், அவரது வாழ்க்கைக்குறிப்பு துண்டு பிரசுரத்தை வெளியிட்டும் பேசினார்கள்.

அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தில் இன்னுயிரை ஈந்தவர்களில் தமிழக அளவில் தியாகி கொடிகாத்த குமரன் சிறப்பு மிக்கவர். உயிரிழக்கும் நிலையிலும் தேசியக்கொடியை கையில் இருந்து தரையில் விழாமல் பிடித்து இருந்தவர் திருப்பூர் குமரன். இத்தகைய தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரகாற்றை சுவாசிக்கிறோம்.

இங்கே தியாகி கொடிகாத்த குமரனுக்கு மரியாதை செலுத்துகிற நேரத்தில் அவருக்கு இன்னும் மரியாதை செலுத்துகின்ற வகையில் சில நடவடிக்கைகள் (மணி மண்டபம்) தேவை என்று வாரிசுதாரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கைகள் முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். அது என்ன கோரிக்கை என்று வெளிப்படையாக இப்போது கூற முடியாது.

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் வரலாற்றை, அவர்கள் செய்த தியாகங்களை போற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

தியாகிகளின் வரலாற்றை மாணவ–மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேசப்பற்றை உருவாக்கும் தியாகிகளின் வரலாற்றை கற்றுக்கொடுக்க ஆசிரிய–ஆசிரியைகள் முன்வரவேண்டும். அப்போதுதான் இளைய சமுதாயம் சிறந்த ஆற்றலும், சிந்தனையும், தேசபக்தியும் மிக்கவர்களாக வளருவார்கள்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் வர இருக்கிறது. தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக ரூ.26 ஆயிரத்து 932 கோடி நிதியை ஒதுக்கி சாதனை படைத்தார். இதனால் இந்தியாவிலேயே சிறந்த கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் கல்வித்துறையில் பல புரட்சிகளை செய்தது.

தற்போது மத்திய அரசு எந்த பொதுத்தேர்வு நடத்தினாலும் அவற்றை தயக்கமின்றி சந்திக்க மாணவ–மாணவிகள் தயாராக உள்ளனர். மேலும் இந்த தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளை தயார் செய்யும் வகையில் இந்த மாத இறுதிக்குள் 500 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்காக அனைத்து மாவட்ட தலைமை நூலகங்களிலும் பயிற்சி மையங்கள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கும். நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். புதிய பாடத்திட்டமானது சி.பி.எஸ்.இ. தரத்தில் உருவாக்கப்படுகிறது..

தமிழக மாணவ–மாணவிகள் இந்தியாவில் எந்த மாணவர்களாலும் விஞ்ச முடியாத அளவில் நமது பாடத்திட்டம் அமையும் அந்த நிலையை நாம் எடுப்போம் என்று கொடிகாத்த குமரன் விழாவில் சூளுரைத்து கூறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் அரசாக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு இருந்தது. அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் தமிழக மக்கள் உணவு, உடை, உறைவிடம் அனைத்தும் பெற்று உள்ளனர். நெசவாளர் குடும்பங்களுக்கு அவர் அளித்த 200 யூனிட் இலவச மின்சாரத்தால் கஷ்டங்கள் நீங்கி வாழ்கிறார்கள். உதவித்தொகை, வீட்டு வசதி என்று பல்வேறு உதவிகள் செய்து உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

தமிழக கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 28 வயதில் தனது உயிரை தியாகம் செய்த கொடிகாத்த குமரனுக்கு திருப்பூரில் ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அவர் பிறந்த இடமான சென்னிமலையில் இன்று (நேற்று) விழா எடுக்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். அவருடைய கனவுத்திட்டமாக ‘‘வி‌ஷன் 2023’’ உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–

வரலாற்று நாயகர்களை கவுரவிப்பதில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இருந்தார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த தேர்தலின் போது பேசிய ஜெயலலிதா, முந்தைய தேர்தலில் நான் தமிழக மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறேன். வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறேன். எனவே மீண்டும் மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார். அதுபோன்று எம்.ஜி.ஆருக்கு பின்னர் 32 ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்–அமைச்சராக ஜெயலலிதா வந்தார். அப்போது பேசிய அவர், எனக்கு பிறகும் தமிழகத்தை ஆளும் கட்சியாக அ.தி.மு.க. திகழும் என்றார். அவரது சத்தியவாக்கு இன்று நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசும்போது, ‘எந்த நேரத்திலும் ஏழைகள் ஏற்றம் காண வேண்டும் என்று திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. அவர் தியாகிகள், தலைவர்களை கவுரப்படுத்துவதில் சிறந்து விளங்கினார்’ என்றார்.

விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கொடிகாத்த குமரன் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர். விழாவில் கொடிகாத்த குமரனின் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு ரூ.24 லட்சத்து 12 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

முன்னதாக ஈரோடு மாவட்ட செய்தி –மக்கள் தொடர்பு அதிகாரி ச.விக்னேஷ் வரவேற்றார். முடிவில் உதவி செய்தி–மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்