திருப்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் என்று உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
திருப்பூரில் 9–ம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியானான். இதற்கு காரணம் அரசு மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம் என்று கூறி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த தோட்டத்துப்பாளையம் ஜி.என்.நகரை சேர்ந்தவர் கணேசன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் கவுதம்ராஜ் (வயது 14). விஜயமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கவுதம்ராஜூக்கு ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதையடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கவுதம்ராஜின் பெற்றோர் அவனை கடந்த 2–ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் சாதாரண காய்ச்சல் என்று கூறி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காய்ச்சல் குணமாகாததால் சிறுவனை மீண்டும் நேற்று முன்தினம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் உடனடியாக கவுதம்ராஜை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கவுதம்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தான்.
இந்த நிலையில் கவுதம்ராஜின் மரணத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறி இறந்த மாணவனின் உறவினர்கள் நேற்று காலை திடீரென தோட்டத்துப்பாளையம் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் மர்ம காய்ச்சலுக்கு 9–ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.