பழனி பகுதியில், ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்

பழனி பகுதியில் ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2017-10-04 22:15 GMT

பழனி,

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பழனி சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் கூடுகிற பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், வீடுகளில் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், கொசுக்களை ஒழித்தல், தண்ணீர் தேங்காமல் தடுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை வியாழக்கிழமை தோறும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என தனிப்பிரிவு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சிறப்பு காய்ச்சல் உதவி மையமும் உடனடியாக தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்