நீலகிரி மாவட்டத்தில் தூய்மை பணியில் முழுமையாக ஈடுபட்ட 150 பேருக்கு சான்றிதழ்

நீலகிரி மாவட்டத்தில் தூய்மை பணியில் முழுமையாக ஈடுபட்ட 150 பேருக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2017-10-04 21:45 GMT

ஊட்டி,

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 15–ந் தேதி முதல் கடந்த 2–ந் தேதி வரை தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், மற்றும் 31 ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பஸ் நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களும் முக்கிய வீதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்கள். கிராம மக்கள் இடையே தங்களது கிராமத்தை தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தூய்மையே சேவை பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள், தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். முழுமையாக தங்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தி கொண்ட மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் மேகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிச்சையப்பன், நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், சிவக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட 150 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 45 பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்