மானாமதுரை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
மானாமதுரை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா ஆய்வு செய்தார்.;
மானாமதுரை,
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மானாமதுரையை அடுத்த செய்களத்தூர் கிராமத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் நத்தபுரக்கி கண்மாய் வரத்து கால்வாய் மேம்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார். பருவமழை தொடங்க உள்ளதால் கண்மாய் வரத்து கால்வாய் மேம்பாட்டு பணிகளை விரைவாகவும், அதே வேளையில் நல்ல முறையிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட வேண்டும் என்று அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து இடைக்காட்டூர் ஊராட்சியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் இடைக்காட்டூர் கண்மாய் பாசன வாய்க்கால் மேம்பாட்டு பணியை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கண்மாய் பாசன வசதிகளை பயன்படுத்தியும், இயற்கை உரங்களை பயன்படுத்துமாறும் அறிவுரை வழங்கினார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை பணியை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து முத்தனேந்தல் ஊராட்சி பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளையும், மரக்கன்று நடுதல் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இதேபோல் மற்ற கிராம ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.