முதியோர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை நாராயணசாமி உறுதி
முதியோர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் முதியோர் பராமரிப்பு சங்கம் (பாண்கேர்) சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா ஆந்திர மகா சபாவில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாண்கேர் செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்று பேசினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முதியோர் தினவிழாவினையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
புதுவை அரசு முதியோர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறது. உத்திரபிரதேசத்தில் முதியோர் உதவித்தொகையாக ரூ.400–ம், கர்நாடகாவில் ரூ.600–ம், ஆந்திராவில் ரூ.1000–ம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில்தான் வயது வித்தியாசத்திற்கேற்ப ரூ.3 ஆயிரம் வரை முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விதவை பெண்களுக்கு ரூ.34 கோடியும், மாற்று திறனாளிகளுக்கு ரூ.4 கோடியும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. முதியோர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் பெற்றோரை பெரும்பாலும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.
ஆனால் நமது கலாசாரம் என்பது பெற்றோரும் நம்மோடு இருப்பதுதான். 90 சதவீதம் பேர் பெற்றோரை அரவணைத்து செல்கின்றனர். சிலர் மட்டுமே பெற்றோரை தெருவில் நிற்க வைத்து விடுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
புதுவையில் மேலும் 2 முதியோர் இல்லம் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இத்தகைய முதியோர் இல்லங்கள் கிராமப்பகுதிகளிலும் இருக்கவேண்டும். பாண்கேர் மூலம் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள், படிக்க பத்திரிகைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருகிறோம்.
முதியோர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லவும் அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விழாவில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:–
சீனாவின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் முதியோர்கள். அங்கு முதியோரை கவனமாக அவர்களது குழந்தைகள் பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் 70 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். 30 சதவீதம்தான் முதியோர்கள் உள்ளனர். சிலர் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது போன்ற விஷயங்களில் உதவி புரிகின்றனர். பெற்றோரை மறக்கும் பழக்கம் மாறவேண்டும். இப்போது கூட்டு குடும்பம் குறைந்து மோசமான நிலை வந்துள்ளது.
பெற்றோரை நாம் சரியாக பார்த்துக்கொண்டால்தான் நம்மை நமது குழந்தைகள் நல்ல முறையில் கவனித்துக்கொள்வார்கள். முதியோரை பென்ஷனுக்காக அலையவிடக்கூடாது. முதியோர் உதவித்தொகையை வீடுவீடாக சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதை ஒருவர் தடுத்துவிட்டார்.
குறிப்பிட்ட தேதியில் முதியோர் உதவித்தொகையை வழங்கிவிட வேண்டும். முதியோர் உதவித்தொகையை வீடுவீடாக சென்று வழங்க முடியாவிட்டாலும் அங்கன்வாடி மூலமாவது வழங்கவேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.