காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்

வால்பாறையில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-03 23:00 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் மளுக்கப்பாறை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அதிகளவில் காட்டுயானைகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஒரு குட்டி உள்பட 5 யானைகள் மளுக்கப்பாறை எஸ்டேட் புதுக்காடு, மளுக்கப்பாறை, ரோப்வே மட்டம் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், கடைகள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

எனவே காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும், இது குறித்து திருச்சூர் மாவட்ட கலெக்டர், உயர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மளுக்கப்பாறை வால்பாறை-சாலக்குடி ரோடு புதுக்காடு எஸ்டேட் பகுதியில் மளுக்கப்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த கூடுதல் மாவட்ட நீதிபதி சஜன், மாவட்ட வனஅலுவலர் ராஜேஸ், சாலக்குடி தாசில்தார் மதுசூதனன், துணை தாசில்தார் ஆண்டோ, கிராம நிர்வாக அலுவலர் ராஜன், மளுக்கப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர், மளுக்கப்பாறை எஸ்டேட் மேலாளர் கோபி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், வனத்துறையினர், போலீசார், எஸ்டேட் நிர்வாகத்தினர், பொதுமக்கள் இணைந்து சிறப்புக்குழு அமைத்து காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, எஸ்டேட் நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர் செடிகளை அகற்றுவது, மின்வேலி அமைப்பது, கடந்த 2 மாதத்திற்கு முன் காட்டுயானை தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்று தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

வால்பாறை- சாலக்குடி சாலையில் மறியல் காரணமாக 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்