தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேர் கைது

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-03 23:00 GMT
கோவை,

நீட் தேர்வு, உதய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதை எதிர்க்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

120 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் பேசும்போது, நீட் தேர்வு, உதய் திட்டம் உள் ளிட்ட திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டுவர முயற்சித்த போது மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போது ஆட்சி செய்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்து வருகிறது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என்றார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம், நிர்வாகிகள் அசரப் அலி, கல்யாண சுந்தரம், தேவராஜ், சுதா, லதா, விவசாய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 20 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்