கோவை கோட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து இன்று முதல் பஸ்களை இயக்க மாட்டோம்

கோவை கோட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து இன்று (புதன்கிழமை) முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்று போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.;

Update: 2017-10-03 22:45 GMT
கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் டிரைவர், கண்டக்டர், அலுவலக பணியாளர், தொழில் நுட்ப பணியாளர்கள், வாகன தணிக்கையாளர்கள், பாதுகாவலர் உள்பட 16 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி சம்பளம் வழங்கப்படும்.

கடந்த மாதம் இறுதியில் தொடர்விடுமுறை காரணமாக 1-ந் தேதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. ஆனால் நேற்று டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் ஆகியோருக்கு மட்டும் பாதி சம்பளம் செலுத்தப்பட்டது. மீதமுள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஊழியர்கள், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். போதிய நிதி இல்லாத காரணத்தால், சம்பளம் போட முடியவில்லை. விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை காட்டூரில் நேற்று நடந்தது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 10 தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் செல்வராஜ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருணகிரிநாதன், துணைத்தலைவர் அப்துல்ரசீது ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கம்பெனி பட்டுவாடா சட்டத்தின்படி ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதி சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் கடந்த மாதம் 29, 30 மற்றும் இந்த மாதம் 1 மற்றும் 2-ந் தேதிகளில் வங்கி களுக்கு தொடர் விடுமுறை என்பதால் 1-ந் தேதி சம்பளம் வழங்க முடியாததை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதன்பிறகு பாதி பேருக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. மீதி பேருக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதை கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட பொதுமேலாளர் கோவிந்தராஜிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே பாதி சம்பளம் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கும், சம்பளம் வழங்கப்படாத ஊழியர் களுக்கும் இன்று (புதன்கிழமை) மதியத்துக்குள் சம்பளம் வழங்கப்பட்டு விடும். எனவே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வழக்கம்போல பஸ்கள் இயக்கப்படும்‘ என்றார். இதற்கிடையே, கோவை சுங்கம் பணிமனை உள்பட கோவையில் உள்ள அனைத்து பணிமனைகளின் முன்பு இருக்கும் போக்குவரத்து ஊழியர் சங்க அறிவிப்பு பலகையில், ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காவிட்டால் இன்று (புதன்கிழமை) முதல் பஸ்கள் ஓடாது என்று தொழிற்சங்கத்தினர் எழுதி வைத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்