தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு போலீஸ்காரர் உள்பட 5 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு போலீஸ்காரர் உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்தார்.

Update: 2017-10-03 23:15 GMT
மதுரை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அனுசுயா என்பவருக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது. இதனால் அவர் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கச்சாமி நேற்று இறந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன். இவருடைய மனைவி மேரி(வயது 60). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேரிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே நாங்கூர் திருமேனிகூடம் பகுதியை சேர்ந்தவர் நாடி ராஜேந்திரன் (வயது 55). பிரபல நாடி ஜோதிடரான இவர், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் முன்னாள் சீர்காழி ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடி ராஜேந்திரன் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாடி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரிச்சபுரத்தை சேர்ந்தவர் பாலையன். விவசாயி. இவருடைய மகள் ஆனந்தநாயகி (வயது 21). இவர் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி ஆனந்தநாயகி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே மேல்வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், விவசாயி. இவரது மனைவி அஞ்சலை (32). இந்த நிலையில் அஞ்சலை டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மகள் தேவிகா. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2 மாதங்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி தேவிகாவிற்கு காய்ச்சல் பாதிப்புடன், கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அவளை, பெற்றோர் கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தேவிகா பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவி பலியான சம்பவம் அஞ்சூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்