அய்யப்பன் கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மடத்துக்குளம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் ஐம்பொன் சாமி சிலை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2017-10-03 23:15 GMT
மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த பெருமாள்புதூர் பகுதியில் கொண்டையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தின் பின்புறம் உள்ள பெரிய பாறையின் மீது 18 படிகள் அமைக்கப்பட்டு அய்யப்பன் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதன் அருகில் கருப்பணசாமி சன்னிதியும் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் இந்த கோவிலில் அனைத்து பூஜைகளும் முடிந்த பின்னர் பூசாரி கோகுல்பிரசாந்த் (வயது 19) கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கோவிலை சுத்தம் செய்வதற்காக கஸ்தூரி (40) என்ற பெண் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் அய்யப்பன் சன்னிதி கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கஸ்தூரி உடனடியாக கோவில் நிர்வாகி மாரப்பனுக்கு (55) தகவல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகி மற்றும் அக்கம்பக்கத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாரப்பன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அய்யப்பன் சன்னிதியில் 1½ அடி உயரத்தில் இருந்த ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் உற்சவர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் கோவிலில் முன்புறம் இருந்த உண்டியலையும், உடைக்க முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

எனவே இது குறித்து குமரலிங்கம் போலீசாருக்கு மாரப்பன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நள்ளிரவில் கோவிலை யொட்டி இருந்த மண்டபம் வழியாக கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கருப்பணசாமி கோவிலில் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அய்யப்பன் சன்னிதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

மேலும் கோவிலின் முன்புறம் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எளிதில் உடைக்க முடியாமல் போனதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதும் தெரியவந்தது. இதற்கிடையில் உண்டியலில் பக்தர்கள் போடும் பணம் உள்ளிட்ட காணிக்கைகள் குழாய் மூலம் கீழே உள்ள பாதாள அறையில் சென்று சேர்ந்துள்ளதால் பணம் தப்பியது.

மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அத்துடன் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தபடி கோவிலுக்கு வெளியே சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலில் கொள்ளை போன ஐம்பொன்னாலான அய்யப்பன் சாமி சிலையின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்