டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காத டாக்டர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காத அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.;

Update: 2017-10-03 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்ஜினீயரிங் படித்து வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் அடியோடு பாதிக்கப்படும். எனவே முதல்-அமைச்சர் தலையிட்டு வழக்கம்போல் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவோதயா பள்ளி தமிழகத்திற்கு தேவையில்லை. நமது கல்விமுறை சிறப்பாகவே இருக்கிறது. இந்த கல்விமுறையில் படித்து பட்டம் பெற்ற டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. நவோதயா பள்ளி கொண்டு வருவதன் நோக்கம் இந்தியை திணிப்பது ஆகும். இதை கண்டிக்கிறோம்.

மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றியதால் தான் மத்தியஅரசு ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு தேவையற்றது. 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதுகின்றனர். 10, 12-ம் வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வு எழுதி தங்களது திறமையை நிலைநாட்டியுள்ளனர்.

அப்படி இருக்கும்போது இன்னொரு தேர்வு தேவையில்லாதது. நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மாணவி தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு தொடர்ந்தால் இன்னும் பல மாணவர்களின் உயிர் போகும். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீது வழக்கு போட்டால் அதை சந்திப்பேன். நான் தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டத்தையே சந்தித்தவன்.

தமிழகஅரசு எப்போது மத்தியஅரசை எதிர்த்துள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னரும் நீட் தேர்வை மத்தியஅரசு திணித்தபோது எங்கள் மாணவர்கள் இந்த தேர்வை எழுதமாட்டார்கள் என கூறி தமிழகஅரசு எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால் மத்தியஅரசுக்கு தமிழகஅரசு பணிந்து போகும் நிலை இருக்கிறது. இதை கண்டிக்கிறோம். சுகாதார சீர்கேட்டை பற்றி தமிழகஅரசு கவலைப்படவில்லை.

டெங்கு காய்ச்சலால் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் குழுவினர் கிராமங்களுக்கே நேரில் சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் நகரப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து அவதிப்படுகின்றனர். சிலர் இறந்துபோய்விட்டனர். எனவே கிராமப்புறத்திற்கே டாக்டர்கள் குழு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வது தான் டாக்டர்களின் முதல் கடமை. டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பணிக்கு வராத அரசு டாக்டர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்