பாறைக்குழியில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் சாவு உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் அருகே பாறைக்குழியில் குளித்த போது நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். அவனுடைய உடலை மீட்க தாமதமானதால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-03 22:45 GMT
வீரபாண்டி,

திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் லட்சுமணன் (வயது 8). இவன் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் லட்சுமணன் விளையாட சென்றான்.

அப்போது, இடுவம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு சென்ற அவன், தனது உடைகளை கழற்றி கரையில் வைத்து விட்டு பாறைக்குழியில் தேங்கி இருந்த நீரில் இறங்கி குளித்துள்ளான். அப்போது லட்சுமணன் திடீரென நீரில் மூழ்கினான். இதைப்பார்த்து பதறிய அவனுடைய நண்பர்கள், சத்தம் போட்டுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மாணவன் லட்சுமணன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வீரபாண்டி போலீசாருக்கும், திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பாறைக்குழியில் இறங்கி லட்சுமணனின் உடலை தேடினார்கள். இரவு நேரம் ஆனதால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காலையில் உடலை தேடுவதாக தீயணைப்பு துறையினர் கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணி வரை தீயணைப்பு துறையினர் லட்சுமணனின் உடலை தேடும்பணியை தொடங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணனின் உறவினர்கள், முருகம்பாளையம்-இடுவம்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதற்கிடையே திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் பாறைக்குழி பகுதிக்கு சென்று லட்சுணனின் உடலை தேட தொடங்கினார்கள். இதனால் சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு லட்சுமணனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், லட்சுமணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்