சட்டமன்ற தேர்தல் எனது தலைமையில் தான் நடக்கும் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் எனது தலைமையில் தான் நடக்கும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு,
மைசூரு டவுன் ஊட்டஹள்ளியில் நேற்று நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு விமானம் மூலம் வந்தார். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரிடம் அடுத்த தேர்தல் என்னுடைய தலைமையில் நடக்கும் என்றும், அடுத்த ஆண்டு தசரா விழாவை நான் தொடங்கி வைப்பேன் என்று நீங்கள் கூறியதற்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், சித்தராமையா தலைமையில் தேர்தல் நடக்காது. கட்சியின் மேலிடம் தலைமையில் தான் தேர்தல் நடக்கும் என்று கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சித்தராமையா கூறும்போது:–
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) நடக்கும் சட்டமன்ற தேர்தல் எனது தலைமையில் தான் நடக்கும் என்று கட்சியின் மேலிடம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இதனால் என்னுடைய தலைமையில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மாநில அரசின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாத சிலர் அரசு பற்றி மக்களிடையே அவதூறு பரப்புகின்றனர். மக்களிடம் யார் என்ன சொன்னாலும் சரி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி.
கர்நாடகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா வந்து பிரசாரம் செய்தாலும் பா.ஜனதா வெற்றி பெறாது. நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளதாக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணிய சாமி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் கூறியுள்ளனர்.
நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அடுத்த முறை மத்தியில் கண்டிப்பாக பா.ஜனதா ஆட்சி அமையாது. காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இப்போது தான் பா.ஜனதாவின் உண்மை முகம் தெரிந்து உள்ளது. அவர் பா.ஜனதாவில் இணைந்த பின்பு வேதனைகளை அனுபவித்து கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மந்திரிகள் மகாதேவப்பா, கீதா மகாதேவ பிரசாத், தன்வீர் சேட் உள்பட பலர் உடன் இருந்தனர்.