நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதை கண்டித்து தேசியவாத காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்

நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சர்ச்கேட், கல்வா ரெயில் நிலையங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-10-03 23:15 GMT

மும்பை,

மத்திய ரெயில்வேயின் பரேல், மேற்கு ரெயில்வேயின் எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைபாதையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

இதன்படி நேற்று மேற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகமாக மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் தேசியவாத காங்கிரசார் திரண்டு மின்சார ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் அவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர்.

இதேபோல மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள கல்வா ரெயில் நிலையத்தில் ஜிதேந்திர அவாட் எம்.எல்.ஏ. தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்தனர். அப்போது நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதை கண்டித்தும், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்கள் அனைவரையும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். மேற்படி இரண்டு இடங்களிலும் நடந்த ரெயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டவர்களை போலீசார் உடனுக்குடன் அப்புறப்படுத்தியதால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்