மாகிம் தர்கா அருகே 4 பேருக்கு சரமாரி கத்திக்குத்து மேற்குவங்கத்தை சேர்ந்தவர் கைது

மாகிம் தர்கா அருகே 4 பேரை கத்தியால் சரமாரியாக குத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-10-03 22:00 GMT

மும்பை,

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் குழுவாக சுற்றுலா பஸ்சில் சம்பவத்தன்று மாகிம் தர்காவிற்கு வந்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக தர்காவிற்குள் செல்ல தயாராகி கொண்டிருந்த வேளையில், பஸ்சில் வந்த மஜித் சஹிருதின்(வயது52) என்பவருக்கும், மோயின் ஹூசைன் (20), சுபேர் சேக் ஆகியோருக்கும் இடையே திடீரென தகராறு உண்டானது. இந்த தகராறு முற்றி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

இதில், கடும் ஆத்திரம் அடைந்த மஜித் சஹிருதின் தான் வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்து இருவரும் அலறி துடித்தனர்.

இந்த சத்தம்கேட்டு ஓடிவந்த தர்கா ஊழியர்கள் 2 பேர் மஜித் சஹிருதினை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் மஜித் சஹிருதின் சரமாரியாக குத்தினார். இதில் அவர்களும் காயம் அடைந்தனர். பின்னர் மஜித் சஹிருதின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து வந்த மாகிம் போலீசார் கத்திக்குத்தில் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், தப்பியோடிய மஜித் சஹிருதின், தாதர் பகுதியில் சுற்றி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மஜித் சஹிருதினை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்