திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2017-10-03 22:15 GMT

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 28–வது தெருவை சேர்ந்தவர் சோமநாதன் (வயது 32). ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் கொரட்டூர் பகுதியில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த திவ்யா (27) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் கணவன்–மனைவி இருவரும் தீபாவளிக்கு புதிய துணிகள் எடுப்பதற்காக கடைக்கு சென்றனர். அவர்கள் இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது இரவு சமையல் செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த திவ்யா படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாளிட்டுக் கொண்டு மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு கொண்டார்.

பின்னர் சோமநாதன் கதவை உடைத்துக்கொண்டு, உள்ளே சென்று திவ்யாவை மீட்டு, அவரை தனது காரில் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே திவ்யா இறந்து விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகி 7 மாதத்தில் திவ்யா தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்