மூலைக்கரைப்பட்டி அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூலைக்கரைப்பட்டி அருகே, ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை, மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

Update: 2017-10-02 23:08 GMT

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகப்பேரியை அடுத்த லெத்திகுளத்தை சேர்ந்தவர் சிவகுரு (வயது 48), விவசாயி. அவருடைய மனைவி குமாரி சந்திரா (43), மகள் பார்வதி (17). இவர்களுக்கு சொந்தமான தோட்டம், லெத்திகுளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் தாயும், மகளும் தோட்டத்துக்கு சென்று குளித்து விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் டிப்–டாப் ஆசாமிகள் 2 பேர் வந்தனர். குமாரி சந்திரா அருகில் வந்து, இந்த ரோடு எங்கே செல்கிறது என கேட்டபடியே கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும், மகள் பார்வதியும் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். குமாரி சந்திராவும் சங்கிலியை இறுக பற்றிக் கொண்டார்.

ஆனாலும் மர்ம ஆசாமிகள் கையில் தங்க சங்கிலி சிக்கிக் கொண்டது. பின்னர் இருவரும் சங்கிலியுடன் மோட்டார்சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றனர். சங்கிலியில் மாட்டி இருந்த மாங்கல்யம் மட்டும் குமாரி சந்திராவுக்கு கிடைத்தது.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் குமாரி சந்திரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி வழக்குப்பதிவு செய்து, மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்ற டிப்–டாப் ஆசாமிகளை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்