நெல்லை மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு

நெல்லை மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் கார்டு‘ கிடைக்கும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.;

Update: 2017-10-02 23:06 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் காந்தி பிறந்த நாளையொட்டி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. சேரன்மாதேவி அருகே உள்ள வடக்கு காருகுறிச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு வெள்ளப்பாண்டி தலைமை தாங்கினார்.

இதில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் குடிநீர் சிக்கனம், கழிப்பறைகளை பயன்படுத்துதல், சுகாதார கிராமம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கிராம வரவு–செலவு கணக்கு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசும்போது கூறியதாவது:–

இந்த கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்தும், குடிநீர் சீராக வழங்க கோருதல், தெரு விளக்கு பராமரிப்பு, கன்னடியன் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு உள்பட பல்வேறு தேவைகளை பொது மக்கள் கோரிக்கையாக வைத்துள்ளீர்கள். கன்னடியன் கால்வாயில் இருந்து விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குடிநீர் கிராம மக்களுக்கு சீரான வகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 6 மாதங்களில் இந்த கிராமத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திறந்த வெளி கழிப்பிடமில்லாத கிராமமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேளாண் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள 8.50 லட்சம் ரே‌ஷன் கார்டுகளில் 7.50 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டுகள்‘ வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கு இந்த மாத (அக்டோபர்) இறுதிக்குள் ‘ஸ்மார்ட் கார்டுகள்‘ வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

கூட்டத்தில், தோட்டக்கலை துறை மூலம் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க மானிய விலையில் விதைகள் மற்றும் பொருட்கள் 7 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.

இதில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, உதவி கலெக்டர் (பயிற்சி) இளம் பகவத், வேளாண்மை துறை இணை இயக்குனர் கனகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) முத்து இளங்கோ, (வேளாண்மை) சாந்திராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், மகளிர் திட்ட இயக்குனர் ஹெட்சி லீனா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகசங்கர், மங்களம் கோமதி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்