டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுவையில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-10-02 22:35 GMT

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை முதல்–அமைச்சர் நாராயணசாமி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கந்தசாமி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினேன். அப்போது புதுச்சேரியில் டெங்கு கொசு பரவி, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொசு மருந்து அடித்து, கொசுவை ஒழிப்பதில் இருதுறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தேன்.

அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் 2–வது முறையாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளை அழைத்து, புதுச்சேரியை டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த கூட்டத்தில் புகை மருந்து மூலம் கொசுவை ஒழிக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உள்ளாட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகை மூலம் கொசு ஒழிக்கும் உபகரணத்தை வழங்கி கொசுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்திற்கும் ஒரு புகை மருந்து அடிக்கும் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நானும், அமைச்சர் கந்தசாமி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தோம். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்தபோது பலர் திருக்கோவிலூர், கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து வந்து சிகிச்சை பெறுவது தெரியவந்தது.

அதுபோல் புதுச்சேரி மூலக்குளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்துள்ளனர். மேலும் சென்னையில் பணிபுரியும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவிற்கான மருந்தும், அதை ஒழிப்பதற்கான உபகரணமும் வாங்க நிதி ஒதுக்கியுள்ளோம். டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது.

700 சதவீதம் டெங்கு காய்ச்சல் இருப்பதாக ஒரு தகவல் பத்திரிக்கையில் படித்தேன். அவ்வாறு இல்லை. புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 பேர்தான் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். முதலியார்பேட்டையைச் சேர்ந்த சரவணன் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இருதய நோயால் இறந்தார். ஆனால் டெங்குவால் இறந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

புதுச்சேரி முழுவதையும் சுத்தமாக வைத்திருப்பது என்பது கொள்கையாக உள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என விசாரித்தபோது, முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நல்ல முறையில் குணமடைந்து வருகிறோம் என்று தெரிவித்தனர். எனவே புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது முன்பு இருந்ததை விட நோயாளிகள் வருகை குறைந்துள்ளது. மேலும் 30 முதல் 40 சதவீதம் வரை வெளிமாநிலத்தில் இருந்து வந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்