திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

திண்டுக்கல்லில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Update: 2017-10-02 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நேற்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தி எடுத்தது. ஆனால், மாலையில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.

இதனால் நாகல்நகர் ஆர்.எஸ். சாலை, என்.ஜி.ஓ. காலனி, ஆர்.எம்.காலனி, கரூர் சாலை, கிழக்குரதவீதி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைதண்ணீர் சென்றது. திருமலைசாமிபுரம், இந்திராநகர், நாகல்புதூர் ஆகிய பகுதியில் மழைத் தண்ணீர், கழிவுநீருடன் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

இந்தநிலையில் மழை காரணமாக மருதானிக்குளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. ஆனால், முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஆர்.எம்.காலனியில் உள்ள கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. சிறிது நேரத்தில் அந்த கிணறும் நிரம்பியதால், அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது. மேலும் அருகில் இருக்கும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றதால் வீட்டில் இருந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.

இதற்கிடையே பலத்த காற்று காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே நின்ற மரத்தின் கிளை முறிந்து, மின்கம்பி மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் திண்டுக்கல் நகரில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று மரக்கிளையை அகற்றி, அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்தனர். 

மேலும் செய்திகள்